RSS

ரஹஸ்யத்ரயத்தின் சிறப்பு

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

பிறவிக்கடலில் இருந்து மீண்டு நல்வீடு பெறுவதற்கு முக்கியமாக நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அர்த்த பஞ்சகம் எனப்படும் ஐந்து விஷயங்கள். பரமாத்ம ஸ்வரூபம், ஜீவாத்ம ஸ்வரூபம், உபாய ஸ்வரூபம், புருஷார்த்த ஸ்வரூபம், விரோதி ஸ்வரூபம் என்னும் ஐந்து அர்த்தங்களே அர்த்த பஞ்சகங்கள் ஆகும்.

திருவாய்மொழித் தனியன்களிலே இந்த விஷயத்தை ப்ரதிபாதிக்கும் ஒரு தனியன் உண்டு. மிக்க இறை நிலையும், மெய்யாம் உயிர் நிலையும், தக்க நெறியும், தடையாகித் தொக்கியலும், ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன் யாழினிசை வேதத்தியல் என்ற திருவாய்மொழித் தனியனைக் காண்க.

இந்த அர்த்த பஞ்சகத்தைப் பற்றி மற்ற ஸாஸ்த்ரங்கள் பலவற்றில் இருந்தும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும். ஆனாலும் திருமந்த்ரம், த்வயம், சரமஸ்லோகம் என்கிற ரஹஸ்யத்ரயத்தைக் கொண்டு இதனை அறிவதே மிகவும் சிறந்தது என்பது நம் பூர்வர்களுடைய(ஆச்சார்யர்களுடைய) திருவுள்ளம்.

இந்த ரஹஸ்யத்ரயம் சொல்வடிவில் சுருங்கி இருந்தாலும் பல ஆழ்ந்த அறிய அர்த்தங்களைக் கொண்டது என்பதாலே , ஸகல ஸாஸ்த்ர அர்த்தங்களை நன்கு உணர்ந்தவர்களாகிலும் நம் பூர்வாசார்யர்கள் ரஹஸ்யத்ரயத்தின் ஆழ் பொருளை அறிந்து பரமக்ருபையாலே தம்மிடம் ஆஸ்ரயித்தவர்களுக்கு அருமருந்தாக அர்த்தத்தோடு உபதேசித்து வந்தார்கள்/வருகிறார்கள்.

ஸ்ரீவைஷ்ணவ பெரியோர்களான நம் பூர்வாசார்யர்கள் காட்டின வழியிலே ரஹஸ்யத்ரயத்தில் மறைந்துள்ள ஆழ்ந்த அர்த்தங்களை ஸதாசார்யனிடமிருந்து காலக்ஷேப முறையிலே  கேட்டு இன்புற வேணும் என்று எல்லோருடைய திருவடிகளிலும் ப்ரார்தித்துக் கொள்கிறேன்

வாழி யதிராசன்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

 

ப்ரமாணம் – ப்ரமேயம்

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீ பாலதந்வி குரவே நம

உலகில் உள்ள எல்லா பொருட்களும் ப்ரமாணம் என்றும் ப்ரமேயம் என்று இரண்டு வகைப்படும்.

ப்ரமா என்றால் அறிவு/ஞானம்.
ப்ரமாணம் – ஞானத்தைப் பெறக்கூடிய ஒரு ஸாதனம் (ஸம்ஸ்க்ருத மற்றும் திராவிட வேத வேதாந்தங்கள்). ஞானத்தைத் தருபவர் ப்ரமாதா (ஆசார்யர்கள்). ப்ரமாணத்தால் அறியப்படுவது ப்ரமேயம்.

ப்ரமாணம் – ப்ரத்யக்ஷம், அநுமானம், ஸப்தம் என்று மூன்று வகைப்படும்.

ப்ரத்யக்ஷம் – கண் காது முதலியவைகளைக் கொண்டு ஒரு வஸ்துவை தெரிந்து கொள்ளும் முறையே ப்ரத்யக்ஷம் எனப்படும்.

அநுமானம் – ஏற்கனவே கற்றதன் அடிப்படையில் பெறக்கூடிய ஞானம். உண்மையை நிரூபிப்பதற்கு கையாளப் படுகின்ற விதிமுறைகளில் இதுவும் ஒன்று. அதாவது அறிந்த ஒன்றை அடிப்படையாகக் கொண்டு அறியாத ஒன்றை ஊகித்து அறிந்து கொள்ளுதல். உதாரணம் – புகையைப் பார்த்து அங்கு நெருப்பு இருக்கிறது என்றும், நிலம் நனைந்திருப்பதை பார்த்து மழை பெய்திருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுதல்

ஸப்தம் – ஸாஸ்த்ரம்(ஆதாரமாக விளங்கக்கூடிய நூல்கள்) வேத வேதாந்தங்கள், ப்ரஹ்மஸூத்ரம், ஸ்ரீமத் பகவத் கீதை முதலிய நூல்கள்

ப்ரமேயம் த்ரவ்யம் அத்ரவ்யம் என இரண்டு வகைப்படும். த்ரவ்யம் ஜடம், அஜடம் என்று இரண்டு வகை.

அஜடம் (ஆத்மா) – வேறொன்றின் உதவி இல்லாமல் தன்னைத் தானே காட்டும் வஸ்து.

ஜடம் – வேறொன்றின் உதவி இல்லாமல் தன்னைத் தானே காட்டாத வஸ்து.

ஜடம் – ப்ரக்ருதி, காலம் என்று இரண்டு வகைப்படும்.

ப்ரக்ருதி – மூலப் ப்ரக்ருதி, மஹான், அஹங்காரம், ஐந்து தன்மாத்ரைகள், ஐந்து பூதங்கள், ஐந்து கர்மேந்த்ரியங்கள், ஐந்து ஞானேந்திரியங்கள் மற்றும் மனம் ஆகிய இருபத்து நான்கு தத்துவங்கள் அடங்கியது இந்த ப்ரக்ருதி.

காலம் என்பது வருங்காலம், நிகழ்காலம். மற்றும் கழிகாலம் என்று மூவகைப் படுகிறது.

அஜடம் – பராக் மற்றும் ப்ரத்யக் என்று இரண்டு வகைப்படும்.

ப்ரத்யக் – அறிவின் பலனை அனுபவிக்கும் வஸ்து. அப்படியல்லாதது பராக்.

பராக்கான அஜடத்ரயம் – நித்யவிபூதியான பரமபதம், மற்றும் சூரியனுக்கு ஒளிபோல ஆத்மாவுக்கு தர்மமாய் இருக்கும் அறிவு, அதாவது தர்மபூதஜ்ஞாநம் என்று இரண்டு வகைப்படும்.

ப்ரத்யக்கான அஜடத்ரயம் ஜீவன் மற்றும் ஈஸ்வரன் (எம்பெருமான்) என்று இரண்டு வகைப்படும்.

ஜீவர்களின் மூன்று வகைகள்: ஸம்ஸாரத்தில் கட்டுண்டு உழலும் பக்தன் (பிறப்பு இறப்பு சூழலில் மாட்டிக்கொண்டு இருப்பவன்), பிறப்பு இறப்பு சூழலில் இருந்து விடுபட்ட முக்தன் மற்றும் நித்யஸூரி (என்றுமே பரமபதத்திலே வசிக்கக்கூடிய ஜீவர்கள் – பிறப்பற்றவர்கள்)

பக்த ஜீவர் இருவகைப் படுவர் :

ப்ராக்ருதமான (ப்ரக்ருதி ஸம்பந்தத்தோடேகூடின) இவ்வுலக இன்பங்களை விரும்பும் புபுக்ஷு என்றும் ப்ரக்ருதி ஸம்பந்தம் அற்ற அவ்வுலக (நித்யவிபூதியான பரமபதம்) இன்பத்தை விரும்பும் முமுக்ஷு என்றும் பக்த ஜீவர் இரண்டு வகைப்படுவர்.

பகவத் அனுபவமாகிற பரமபுருஷார்த்த மோக்ஷத்தை விரும்புபவர்களும் கூட சாதன பேதத்தாலே பக்தன் என்றும் ப்ரபன்னன் என்றும் இருவகைப் படுகிறார்கள். அதாவது மோக்ஷம் அடைவதற்கு பக்தியோகத்தை அனுஷ்டிப்பவன் பக்தன் என்றும், எம்பெருமானையே மோக்ஷ உபாயமாகப் பற்றுபவன் ப்ரபன்னன் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

ப்ரபன்னன் ஏகாந்தி என்றும் பரமைகாந்தி என்றும் இருவகை படுகிறான்.

எம்பெருமானைத் தவிர வேறொரு தேவதையை எண்ணாமல் இருப்பவன் ஏகாந்தி. ஆனால் ப்ரயோஜனாந்தரங்களை யாசிப்பவனாவான்.

பரமைகாந்தியோ பரம புருஷனிடம் மற்ற பலன்களை விரும்பாமல் இருப்பவன் ஆவான்.

பரமைகாந்தி திருப்தப் ப்ரபன்னன் என்றும் ஆர்த்தப் ப்ரபன்னன் என்றும் இருவகைப் படுகிறான்.

சரீரம் போன பிறகு மோக்ஷத்தை விரும்புமவன் திருப்தப் ப்ரபன்னன் என்று அழைக்கப்படுகிறான். சரணாகதி பண்ணிய உடனேயே கூவிக் கொள்ளும் காலம் இன்னும் குருகாதோ என்றபடி அதிசீக்ரமான காலத்திலே மோக்ஷத்தை விரும்புமவன் ஆர்த்தப்ரபன்னன் எனப்படுகிறான்.

ஸர்வேஸ்வரன் ஸ்ரீமந்நாராயணன் ஐந்து நிலைகளிலே சேவை சாதிப்பதாக நாம் ப்ரமாணங்களைக் கொண்டு அறிய முடிகிறது.

எம்பெருமான் நாராயணன் ஒருவனே ஆனாலும் திருமேனி பேதத்தால் பரம், வ்யூஹம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்று ஐந்து வகையாக சேவை சாதிக்கிறான்

1. திருநாடு என்று சொல்லப்படும் பரமபதத்திலே எழுந்தருளியிருக்கும் நிலை பரம்.
2. ஸ்ருஷ்டி(படைத்தல்), ஸ்திதி (காத்தல் ) மற்றும் ஸம்ஹாரம்(அழித்தல் ) முதலான காரியங்களைச் செய்வதற்காக வாசுதேவன், சங்கர்ஷணன், ப்ரத்யும்னன் மற்றும் அநிருத்தன் என்று நான்கு மூர்த்திகளாக பிரிந்திருக்கும் நிலை வ்யூஹம் எனப்படும்.
3. மத்ஸ்யம் கூர்மம் தொடங்கி கல்கி அவதாரம் வரை உள்ளவையே விபவம் என்கிறோம்
4 ஒவ்வொருவருடைய ஹ்ருதயத்தில் நம் கட்டைவிரல் அளவுக்கு எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் நிலையே அந்தர்யாமி
5. எம்பெருமான் தேங்கிய மடுக்கள் போன்று பின்னானார் வணங்கும் சோதியாக எழுந்தருளியிருக்கும் (திருவரங்கம் தொடங்கி அனைத்து திவ்யதேசங்களில்) நிலையே அர்ச்சை ஆகும்.

இப்படி ஐந்து விதமான திருமேனிகளுடன் சேவை சாதிக்கும் எம்பெருமானே ஈஸ்வரன் ஆவான்.

வாழி யதிராசன்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

 

விசிஷ்டாத்வைத மதம் கொள்கைகள்:

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

சித் – அறிவுள்ள ஜீவாத்மா,  அசித் – அறிவற்ற ஜடப் பொருட்கள் மற்றும் ஈஸ்வரன் – பரமாத்மா என்கிற மூன்று தத்துவங்களும் உண்மையான தத்துவங்கள். எப்போதும் உள்ளவை. இம்மூன்றும் எக்காலத்திலும் இயற்கையாகவே தனிப்பட்ட தத்துவங்களே. ஜீவாத்மாக்கள் பல. ஜீவாத்மா எப்போதும் ஈஸ்வரனுடன் கூடியே இருக்கும். சேதன அசேதனங்களோடு கூடிய ப்ரஹ்மம் ஒன்று.
திருநாடான பரமபதம் சென்று எம்பெருமானுக்கு தொண்டு செய்வதே புருஷார்த்தம். இதுவே மோக்ஷம் – ஒரு ஜீவாத்மா பெறக்கூடிய மேலான பலன். மோக்ஷத்தைப் பெற பக்தியோ,  ப்ரபத்தியோ தான் சாதனம்.

ஆத்மாவுக்கு ஆத்மாவான சர்வேஸ்வரனான எம்பெருமானை இடைவிடாது சிந்தித்து அவனிடம் அன்பு செய்வதுதான் பக்தியோகம்.

சரணாகதியே பிரபத்தி

அடியேன் இராமானுஜ தாசன்
வாழி யதிராஜன்

 

ஜீவாத்மா எப்படிப்பட்டவன்?

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

ஆயுதங்களால்  வெட்ட முடியாதவன்
நெருப்பினால் எரிக்க முடியாதவன்
தண்ணீரால் நனைக்க முடியாதவன்
காற்றினால் உலர்த்த முடியாதவன்
நிலையாய் இருப்பவன் – சலனமில்லாதவன்
அணு ஸ்வரூபன் – ஒரு நெல் நுணியை ஆயிரம் பாகம் ஆக்கினால் எவ்வளவு சிறியதோ அதைவிடச் சிறியவன்.
ஐம்புலன்களுக்கு எட்டாதவன்
மனத்தினால் சிந்திக்க முடியாதவன் – அசிந்த்யன்
பஞ்ச இந்த்ரியங்களைக் கொண்டு அறியமுடியாதவன்
அவிகாரன் – ஒருவித ஸ்வரூப மாறுதலும் இல்லாதவன்

தொடரும்…..

அடியேன் இராமானுஜ தாசன்
வாழி யதிராஜன்

 

எம் கோயில் அண்ணனோ

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீ பாலதந்வி  குரவே நம:

நம் பெரியாழ்வரின்  திருமகளான ஆண்டாளுக்கு அண்ணண் ஆனார் நம் ராமாநுஜர். எப்படி என்று தெரிந்துகொள்வோமா?

ஸ்ரீ ஆண்டாள் திருமாலிரும்சோலை அழகருக்கு (மதுரையில் அமைந்துள்ள கள்ளழகர் கோயில்) நூறு தடா வெண்ணையும், நூறு தடா அக்காரவடிசிலும் சமர்பிக்கவிரும்பி அவ்விருப்பத்தை தாம் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி என்னும் பிரபந்த பாசுரத்திலும் பொறித்துவைத்தார்.

ஆனால் ஆண்டாள் தாம் எழுந்தருளியிருந்த காலத்தில் அவ்விருப்பம் நிறைவேறவில்லை. எம்பெருமானார் தாம் திருமலிரும்சோலைக்கு எழுந்தருளிய போது அங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமானான அழகருக்கு நூறு தடா வெண்ணையும் அக்காரவடிசிலும் சமர்ப்பித்தார். பிறகு ஸ்ரீவில்லிபுத்தூர் எழுந்தருளி அங்கு கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஆண்டாளுக்கு மங்களாசாசனம் பண்ணும் போது , ஆண்டாள் ஒரு சிறுபெண் குழந்தையின் வடிவில் அங்குவந்து இராமானுஜரை “எம் கோயில் அண்ணரோ” என்று அழைத்தாராம். ஆக ஆண்டாளுக்கும் அண்ணண் ஆனார் நம் ராமாநுஜர்.

நீசனேன் நிறை ஒன்றுமிலேன்

 

திருக்கோவலூர் ஆயனார் திருக்கல்யாண மஹோத்சவ உத்சவம் அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:(பங்குனி பிரம்மோத்சவம் – ஏழாம் திருநாள்)

http://www.tirukkovalur.blogspot.com/2013/03/blog-post_27.html

தாசானு தாசன் 

இராமானுஜ சிஷ்யன்
 

ஜீவன்

ஸ்ரீமதே இராமாநுஜாய நம:

ஸ்ரீமத் வரவர முநயே நம:

ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

 அசேதனமான  அறிவே இல்லாத ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறுபட்டவன், மேம்பட்டவன், சாஸ்திரத்தைக் கொண்டே இவனை அறிய முடியும், அவ்யக்தன், நம் கண்களால் காண முடியாதவன், பிறப்பு மற்றும் இறப்பு இல்லாதவன், நித்யன், பிரளய காலத்தில் பஞ்ச பூதங்கள் அழியும் போதும் ஜீவன் அழிகிறதில்லை, அக்ஷரம் எனப்படுபவன்.

தாசானு தாசன்
இராமானுஜ  சிஷ்யன்
 

மோக்ஷம்:

ஸ்ரீ:
ஸ்ரீமதே இராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
ஸ்ரீ பாலதந்வி குரவே நாம:
 
நமது சாஸ்திரங்களில் ஒருவர் மோக்ஷம் பெறுவதற்கு ஒரு அடைவு சொல்லப்பட்டுள்ளது:
 
அவை:-
 
அத்வேஷம் 
ஆபிமுக்யம் 
ஆசார்ய உபதேசம் 
கர்மாநுஷ்டானம் 
சித்த சுத்தி 
சரீர ஆத்ம விவேகம் 
கர்ம யோகம் 
ஞான யோகம் 
ஆத்மா தரிசனம் 
பகவத் பக்தி 
இந்த பக்தியானது:-
பரபக்தி 
பரஜ்ஞானம் 
பரமபக்தியாக பக்குவம் அடைந்து பிறகு மோக்ஷம் அடைகிறான் என்பதே அந்த அடைவு ஆகும்.
 
தாசானு தாசன் 
 
இராமானுஜ சிஷ்யன் 
 

ஸ்ரீமத் பகவத் கீதை:

ஸ்ரீ:
ஸ்ரீமதே இராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

“அஜோபி ஸந் அவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபி ஸந்
ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய சம்பவாமி ஆத்மமாயயா”

அர்த்தம்:

ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய – தனக்கே உரிய அப்ராக்ருத திருமேனியுடனே ஞான சக்தி கல்யாண குணங்களுடன் பிறக்கிறான் எம்பெருமான் என்பதை தெரிவிக்கிறது . ஆத்மா மாயயா – என் இச்சையினாலேயே, சம்பவாமி – பலபடியாக அவதரிக்கிறேன். பூதாநாம் ஈஸ்வர: அபிசத் – அனைத்து பிராணிகளுக்கும் ஈஸ்வரனாக இருந்துகொண்டே அப்ராக்ருத திவ்ய மங்கள திருமேனி உடனேயே நான் அவதரிக்கிறேன்.

எம்பெருமான் அவதரிக்கும் பொழுதெல்லாம் அவனுடைய ஞான சக்தி கல்யாண குணங்கள் உடனேயே ஒருவித மாறுதலும் இன்றி பிறக்கிறான். ஆக எம்பெருமான் உடைய திருவவதாரம் என்பது பிரக்ருதியினால் ஆனது அன்று என்பது நன்கு தெளிவாகிறது.

தாசானு தாசன்

இராமானுஜ சிஷ்யன்

 

பிறவிகள்:

ஸ்ரீ:
ஸ்ரீமதே இராமானுஜாய நம :
ஸ்ரீமத் வரவர முநயே நம:
ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

கீதாசார்யனான ஸ்ரீ கண்ணன் எம்பெருமான் அருளியது: பகவத் கீதையில்

“பஹூநி மே வ்யதீதானி ஜந்மானி தவ சார்ஜுன
தாந்யஹம் வேத சர்வாணி ந த்வம் வேத்த பரந்தப”

அர்ஜுனா! உன்னைப் போல் எனக்கும் பல பிறவிகள் சென்று விட்டன. நான் சர்வஜ்ஞன் ஆகையாலே அவற்றை யான் அறிவேன். அஜ்ஞானியான நீ அவைகளை அறிய மாட்டாய். நானோ என் இச்சையினாலேயே பிறக்கிறேன். நீ உன் கர்மாவினால் பிறக்கிறாய்.

தாசானு தாசன்

இராமானுஜ சிஷ்யன்